கம்பம் மெட்டு வழியாகக் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவர்கள் அங்கு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கம்பம் அருகே உள்ள தனியார் பள்ளி எதிரே வந்துகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனிடையே காரில் வந்த இருவர் தப்பியோடினர்.
மேலும், பிடிபட்ட மூவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அனைவரும் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு விற்பனைக்காக கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த குடிமைப்பொருள் மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சுமார் ஆயிரத்து 930 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், க.புதுப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், பாண்டீஸ்வரன், கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தப்பியோடிய செல்லப்பாண்டி, லெனின் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையத்தில் உள்ள குடிமைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.