தேனி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய்த்தொற்று அதிகம் உள்ளவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகின்றது. காய்ச்சல் காரணமாக நாள் தோறும், பெரியகுளம் மருத்துவமனைக்குச் சுமார் 500 முதல் 600 வரையிலான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெரியகுளம் தென்கரை பேரூராட்சிப் பகுதியில் உள்ள ரமா (11), கீழவடகரையைச் சேர்ந்த மோனிஷா (6), லட்சுமிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த நித்யா (8) என்ற மூன்று சிறுமிகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதனையடுத்து மூன்று சிறுமிகளுக்கும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வெளி நோயாளிகளின் பிரிவில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும், உள் நோயாளிகளின் பிரிவில் மேலும் சில நபர்களுக்கு ரத்தத் தட்டணுக்கள் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், பெரியகுளம் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடிவடிக்கை’ - மருந்துக் கடைகளுக்கு எச்சரிக்கை