தேனி: பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட கோழிக்கறி கடையில் வாடிக்கையாளர் ஒருவர் புதன்கிழமை (ஜன.11) இறைச்சி வாங்கியுள்ளார். அதில் புழுக்கள் இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். இந்நிலையில், வியாழன் (ஜன.12) அன்று தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ராகவன் தலைமையில் 5 உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறைச்சிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது கோழிக்கறி கடைகளிலிருந்த குளிர்சாதனப் பெட்டிகளில் சுகாதாரமற்ற முறையில் பல நாட்களாக வைத்திருந்த 25 கிலோ கோழிக்கறியை உணவு பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றினர்.மேலும் சுகாதாரமற்ற முறையில் கோழிக்கறியை வைத்திருந்த கடை உரிமையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெரியகுளம் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் காலாவதியாகி, தேதி குறிப்பிடாமல் இருந்த தின்பண்டங்களை கைப்பற்றினர்.ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் கூறுகையில், “பெரியகுளம் பகுதியில் கோழிக்கறி கடைகளில் கெட்டுப்போன கறிகளை விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து சோதனைகள் ஈடுபட்டு 25 கிலோ கெட்டுப் போன கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டன.நகராட்சியின் மூலம் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் பெரும்பாலும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்ததை கண்டுபிடித்து அவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டது.டீ கடைகளில் வழங்கும் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பொருட்களை செய்தித்தாள்களில் வைத்து வழங்கக் கூடாது, அவ்வாறு வழங்கும் டீ கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆறு மாதங்களில் தேனி மாவட்டம் முழுவதிலும் விற்கப்படும் மீன்களில் பரிசோதனை செய்ததில் ஃபார்மலின் தடவிய 2500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Bank server Hacking: கூட்டுறவு வங்கிய சர்வரை ஹேக் செய்து கொள்ளை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியர்கள்..