தேனி: போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பங்கேற்று பச்சை கெட்டி அசைத்து தொடக்கி வைத்தனர்.
முதலில் கோயில் காளை அவிழ்த்து விட்டு ஆரவாரமாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று(பிப்.15) தொடங்கியது.
காலை 7 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்பு பணிக்காக 750 காவலர்களும், முதலுதவிக்காக 200 நபர்கள் கொண்ட மருத்துவக் குழுவினரும் இருந்தனர்.
தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். மூன்று மருத்துவர்கள் குழு மற்றும் செவிலியருடன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பணியமர்த்தப்பட்டனர்.
பின்னர், தீவிர பரிசோதனைக்குப் பிறகு மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என 8 மணி நேரத்திற்கு 400 வீரர்கள் களம் கண்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக மாடுகள் அடக்கிய வீரர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மாருதி ஆல்டோ கார் வழங்கப்பட்டது.
சிறந்த இரண்டு மாடுகளுக்கு டிவிஎஸ் இருசக்கர வாகனம் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் வழங்கப்பட்டது. மேலும், தங்க காசுகள், வெள்ளி காசுகள், குத்துவிளக்கு, பீரோ, எல்.இ.டி.டிவி, டைனிங் டேபிள், என ஜல்லிக்கட்டில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ஒரு மாடு முட்டியதில் மற்றொரு மாடு விலாஎலும்பு முறிந்து இறந்துள்ளது. போட்டியில் பங்கேற்ற 19 மாடு பிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:"தேர்தல் விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் புகாரளித்தால் உடனே நடவடிக்கை" - சத்யபிரதா சாகு!