காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலை அடுத்து சீனப் பொருள்களுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனால் இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும், இந்திய ஆப் டெவலப்பர்களை (App Developer) ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு செயலிகளுக்கு சவால் விடும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது ’பிக்கிராபி’ செயலி. இந்த அட்டகாசமான செயலியை உருவாக்கியவர் ஒரு 13 வயது பள்ளிச் சிறுவன் என்பது தான் ஆச்சரியமான உண்மை!
தேனி திட்ட சாலையில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் நகரைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - ஜெயமணி தம்பதியினர். இவர்களின் மகன் மிதுன் கார்த்திக் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளி திறக்கப்படாத நிலையில், மற்ற குழந்தைகளைப் போல தொலைக்காட்சி, கணினி விளையாட்டு என்று இந்த ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றி அசத்தியுள்ளார் மிதுன் கார்த்தி.
இந்த தலைமுறை குழந்தைகள் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடித்துவரும் நிலையில், 13 வயதே ஆன மிதுன் கார்த்தி இந்த சமூகவலைத்தளங்களுக்கு மாற்றாக "பிக்கிராபி" (picgraphy) என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.
வெறும் 60 நாள்களில் இவர் உருவாக்கிய பிக்கிராபி செயலியை, தற்போதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். முழு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி, தகவல் திருட்டு, தனியுரிமை உள்ளட்டவற்றிக்கு எந்தவித ஆபத்தும் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி குறித்து மிதுன் கார்த்தி கூறுகையில், "பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோதுதான் இந்த செயலியை உருவாக்கத் தொடங்கினேன். இரண்டு மாதங்களில் இதற்கான வேலைகளை முடித்து, கடந்த ஜூன் 17ஆம் தேதி இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிட்டேன்.
பேஸ்புக், ட்விட்டர் போல இது ஒரு சமூக வலைத்தளம். பயனாளர்களின் தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளேன்" என்றார்.
தொடர்ந்து பிக்கிரோபி செயலி பயனாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் மெசேஞ் அனுப்புவது, வீடியோ அழைப்புகள், ஆடியோ அழைப்புகள், குழு வீடியோ அழைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஏதுவாக "ஹேய் நண்பா" (Hey Nanbaa) என்ற மற்றொரு புதிய செயலியை உருவாக்கும் பணிகளிலும் மிதுன் கார்த்தி தற்போது ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மிதுன்கார்த்தியின் தந்தை பாலமுருகன் கூறுகையில், "அவருக்கு கணினியில் அதித ஆர்வம் உண்டு. இதனால் இரண்டு வயதிலேயே தனியாக அவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தோம். கரோனா பரவத் தொடங்கிய காலத்தில் உலகெங்கும் கரோனா தொற்றால் நாடு வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எளிதில் அறிந்துகொள்ள ஒரு செயலியை உருவாக்கினார்.
அதன் பின்னர்தான் இந்த "பிக்கிராபி" (picgraphy) என்ற செயலியை உருவாக்கினார். இதுபோல உருவாக்கப்படும் செயலிகளின் தரவுகளை சேமிக்க நாங்கள் வெளிநாடுகளின் சர்வர்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நமது அரசு, சர்வர்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் இரண்டு பலன்கள் உள்ளது.
ஒன்று நமது தரவுகள் அனைத்தும் இந்தியாவிலேயே சேமிக்கப்படுவதால் அவை அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும். மற்றொன்று, மிதுனைப் போல சிறு வயதிலேயே டெக் துறையில் தொழில்முனைவோராக உருவாக முயல்வோருக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.
கூகுள் பிளே ஸ்டோரில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த செயலி விரைவில் ஆப்பிள் ஐஓஎஸ் தளத்திலும், இணையதளத்திலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என்று புதிய அப்டேட்டையும் கொடுத்துள்ளார் இந்த 13 வயது சிறுவன்.
இதையும் படிங்க: 2ஆவது தலைநகர் மதுரை: எம்ஜிஆரின் கனவை நனவாக்க விரும்பும் செல்லூர் ராஜூ