உதகை அருகேயுள்ள கல்லட்டி பகுதியில் அமைந்துள்ளது அசகந்தொரை மலை கிராமம். இங்கு படுகர் இனத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அசகந்தொரைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால், சிலர் அருகில் உள்ள கல்லட்டியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனால் இரு பிரிவுகளாக அங்கு மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் அசகந்தொரையில் வசித்து வந்த 85 வயது மூதாட்டி மாதியம்மாள் நேற்று மதியம் உயிரிழந்தார்.
அவர்களது மகன்கள் மற்றும் பேரன்கள் கல்லட்டியில் வசித்து வருவதால், இறந்தவரின் உடலை புதைக்க அந்த ஊரை சார்ந்த எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மயானம் உள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி குழி தோண்ட இடம் தராததோடு சமுதாயக் கூடத்தையும் பூட்டியுள்ளனர். இதனால் இறந்த மாதியம்மாளின் உடலை புதைக்க இடமின்றி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக பிணத்தை வைத்து காத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற புதுமந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மூதாட்டியின் உடலை புதைக்க எதிர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து உடலை புதைக்க ஏற்பாடு செய்யபட்டது. இறந்தவரின் உடலை 24 மணி நேரமாக புதைக்கவிடாமல் அலைக்கழித்த நிகழ்வு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை - இருவர் கைது!