நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு யானைகள் வீடுகளை இடித்தும், மனிதர்களைத் தாக்கியும், வேளாண் பயிர்களைச் சேதப்படுத்தியும் வருவது தொடர்ந்துவருகின்றன. தற்போது அரசு கட்டடங்களைச் சேதப்படுத்தி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட பார்வுட் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசுப் பள்ளி, நூலகம் போன்ற அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் நேற்று (நவ. 08) இரவு வந்த யானை கூட்டம் முதலில் அரசுப் பள்ளியிலிருந்த ஐந்து கதவுகளை உடைத்து உள்ளே இருந்த நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
பின்னர் நூலக பகுதிக்கு வந்த யானைகள் கதவை உடைத்து உள்ளே அடுக்கிவைத்திருந்த புத்தகங்களையும், நாற்காலிகளையும் சேதப்படுத்தியுள்ளன. கடைசியாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த யானைகள் புதிய கிடங்கை உடைத்து உள்ளே இருந்த புதிய மின் விளக்குகள், மின் சாதன பொருள்கள், மருந்துப் பொருள்கள், குடிநீர் உபயோகப் பொருள்கள் உள்பட பதிவறையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் சேதமான பொருள்கள் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர். ஒரே இரவில் மூன்று அரசு அலுவலக கட்டடங்களில் முற்றிலும் சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.