நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, மலைப்பாதை முழுவதும் பசுமையான சூழல் நிறைந்துள்ளது. சீசன் பழங்கள், காய்கறிகள் காய்க்க தொடங்கியுள்ளன. யானைகளுக்கு பிடித்த உணவான பலாப்பழம், கோரைப் புற்கள் அதிகமாக விளைந்துள்ளன.
சமவெளி பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் இதனை உண்பதற்காக குன்னூர் பகுதிக்குள் படையெடுத்தன. இந்த நிலையில், நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் குடியிருப்புகளின் தடுப்புச்சுவர், நுழைவாயில் கதவுகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தின. அத்துடன் வாழை மரங்கள், பேரிக்காய் மரங்கள் உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்திச் சென்றன.
பதறிப்போன வனத்துறையினர்: இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, யானைகள் கூட்டத்தை ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். அப்போது திடீரென யாரும் எதிர்ப்பாராத விதமாக பின்னால் திரும்பி, ஒற்றை யானை வனத்துறையினரை நோக்கி துரத்தத் தொடங்கியதால் அங்கிருந்தவர்கள் பதறி ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. யானை துரத்தியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது, நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?