நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கைகள், யானை கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தொய்வடைந்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் சேரம்பாடி அடுத்த சப்பந்தோடு வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் அந்த யானை சேர்ந்திருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கையை மீண்டும் வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
இதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் விஜய், சுஜய், பொம்மன், முதுமலை, ஸ்ரீநிவாஸ், கலீம் ஆகிய ஆறு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்கள் சுகுமாறன், ராஜேஸ்குமார், மனோகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறை குழுவினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானையின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ள வனத்துறை குழுவினர், அதனை பாதுகாப்பான பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்த முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் சன்னி லியோன் மீது புகார்!