நாடு முழுவதும் கரோனா தொற்றுமூலம் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போது 411 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக்கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பாக, குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பையை இந்திய ராணுவத்தினர் வழங்கியுள்ளனர். அப்பையில் மக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் உள்ளன.
இதனால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருள்கள் கொடுத்த இந்திய ராணுவ மையத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் நமஸ்தே திட்டத்தின் கீழ் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் செயல்பட்டு வரும் சஹாயதா திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் உதவியுடன் இந்த நிவாரணப் பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: இலவசமாக வழங்கப்பட்ட சில்லி சிக்கன்!