நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதன் முதற்கட்டமான கோத்திகிரி, இடுக்கரை கிராமத்தில் உள்ள தடுப்பணையை தூர்வாரும் பணியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்பு மரக்கன்றுகளை தடுப்பணைச் சுற்றி நட்ட அவர், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் பற்றி இடுக்கரை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் இத்திட்டத்தின் மூலம் தூர்வாரப்படும். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.