நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை அருகே பெள்ளட்டிமட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு சிறுவயதிலேயே போலியோ தாக்கியதால் கால்கள் செயலிழந்தன. ஏழ்மை ஒரு பக்கம் இருக்க போலியோ நோயால் பாதிக்கப்பட்டாலும் உத்வேகத்துடன் பிகாம் பட்டப்படிப்பை முடித்துள்ளார் நீலகண்டன்.
இந்நிலையில், வருமானத்திற்காக குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரது மனைவி கூலி வேலைக்கு சென்று வருவதால் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர். இடிந்து விழும் நிலையில் இருக்கும் மண் குடிசை வீட்டில் மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெள்ளட்டிமடம் கிராமத்திற்கு வந்த ஒய்ஸ்மென் தன்னார்வ குழுவினர் இவரின் நிலையை கண்டு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தனர். பிப்ரவரி மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கிய நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக விரைவாக பணிகளை முடித்து, மூன்று கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தற்போது வீடு கட்டிமுடிக்கப்பட்டு நீலகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த நீலகண்டன், தன்னார்வலர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி மக்களும் தன்னார்வலர்களை வியந்து பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்தப்பூ கோலமிட்டு சேலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!