வானில் கருமையான மழை மேகங்கள் ஒன்று சேரும் போது இடியும் மின்னலும் ஏற்படுகிறது. அவ்வாறு இடியும் மின்னலும் ஏற்படும் போது அதில் பல லட்சம் வோல்ட் மின்சாரம் உருவாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். 1927-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சி.டி.ஆர் வில்சன் என்ற ஆராய்ச்சியாளர் மின்னலில் இருந்து 13 கோடி வோல்ட் மின்னழுத்தம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் மின்னலில் ஏற்படும் மின் அழுத்தத்தை அளவிட முடியாது என்பதால் அவரது கண்டுபிடிப்பு இதுவரை உறுதிபடுத்தபடாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் உதகை அருகே மத்திய அரசின் காஸ்மிக் கதிர்கள் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் மின்னல் ஏற்படும் பொது அதில் 130 கோடி வோல்ட் மின்னழுத்தம் உண்டாவதாக கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பல முறை நடத்திய ஆராய்ச்சியில் பூமியிலிருந்து 11.4 கிலோ மீட்டர் உயரத்தில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் மேகத்தில் ஏற்படும் மின்னலில் 130 கோடி வோல்ட் மின்னழுத்தம் உண்டாவதாக உறுதி செய்துள்ளனர்.
இடி மின்னல் ஏற்படும் போது வளி மண்டலத்தில் உள்ள மியுவான் எனப்படும் துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து அதனை உறுதி செய்துள்ளனர். அவர்களது கண்டு பிடிப்பை உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் ஏற்று கொண்டுள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, ஒரு மின்னல் ஏற்படும் போது உருவாகும் மின்னழுத்தத்தை சேமித்து வைத்தால் மும்பை, சென்னை, டெல்லி போன்ற ஏதாவது ஒரு பெருநகரத்திற்கு அரை மணி நேரம் மின் விநியோகம் செய்ய முடியும்.
ஆனால் அந்த மின் ஆற்றலை சேமித்து வைக்க முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.