நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மண்வயல் ஓடக்கூலி கிராமத்தை சேர்ந்தவர் மணி (52 ). இவரும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழங்குடியினரான கண்ணன் என்பவரும் நேற்று மதியம் வனத்தை ஒட்டிய பகுதிக்கு விறகு எடுக்க சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சுற்றி திறந்த காட்டு யானை அவர்கள் இருவரையும் துரத்தியுள்ளது.
மரத்தில் ஏறி கண்ணன் உயிர் தப்பிய நிலையில், யானை தாக்கி மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபரம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த ஊர்மக்கள் மணியின் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர்.
மணியை தாக்கிய காட்டு யானை, 4 நாள்களாக அதே பகுதியில் சுற்றி வருகிறது. கடந்த 2 மாதத்தில் 4 பேரை அந்த யானைக் கொன்ற நிலையில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. வனத்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
உடனடியாக கும்கி யானைகளை வைத்து காட்டு யானையைப் பிடித்து முதுமலை முகாமிற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறி, நேற்று உடற்கூராய்வு முடிந்த நிலையில், மணியின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க : ‘காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க வேண்டும்’- துணை ஆட்சியரிடம் மனு!