நீலகிரி: கரோனா பரவலைப் பொருட்படுத்தாமல், மக்கள் முகக்கவசம் அணியாமல் தெருவில் செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை 1497 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1121 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 376 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துவருவதால், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிப்பதுடன், சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், பர்லியார் ஊராட்சி கரன்சிப் பகுதி கிராம மக்கள் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் தொழிலாளர்கள் முகக்கவசம் பயன்படுத்துவதில்லை. இதனால் கிராமங்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளது.
எனவே கிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றிணைவதை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதுடன், இதுபோன்ற முகக் கவசங்கள் அணியாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் ஊராட்சி அலுவலர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.