நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ளது அதிகரட்டி கிராமம். இங்கு 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி அரசுப் பள்ளிகள், கோயில்கள் அதிகமாக உள்ளன. இங்கிருந்து மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகளில், வாகன திருட்டு ஏற்படுவதும், சக்கரம், இசை பெருக்கி மற்றும் வானங்களின் உதிரி பாகங்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும், மாலை நேரங்களில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதாக, வனத்துறையினருக்கு அதிகரட்டி கிராம மக்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அதிகரட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவில் அதிநவீன CCTV கேமராக்கள் அக்கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதனை குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் குற்றங்கள் குறையவும், வனவிலங்குளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் முடியும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.