நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று இரவு ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத் துறையினர் கண்டறிந்தனர்.
சிறுத்தை குட்டியின் உடல்கூராய்வு செய்யப்பட்டதில் அதன் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறொரு சிறுத்தை தாக்கியதில் சிறுத்தை குட்டி இறந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று சிறுத்தை குட்டி இறந்த பகுதியில் சுமார் 150 மீட்டர் தொலைவில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்து கிடைப்பதை இன்று வனத் துறையினர் கண்டறிந்தனர்.
ஒரு குட்டிக்கு உடல் பகுதியில் காயம் உள்ள நிலையில் மற்றொரு குட்டிக்கு காயம் இருக்கிறதா எனக் கண்டறிய முடியவில்லை. உடற்கூராய்வுக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறை தரப்பில் தெரிவித்தனர்.
பந்தலூரில் இரண்டு நாள்களில் மூன்று சிறுத்தை குட்டிகள் உயிரிழந்திருப்பது குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்