கூடலூர் - பந்தலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளிலும், விவசாய பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தொடர்ந்து மனிதர்களை தாக்கி வரும் யானைகள் தற்போது விவசாய பயிர்களை அழித்து வருகின்றன.
இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கைமா கொல்லி பகுதியில் வசித்து வரும் விஜயன் என்பவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் மற்றும் மரவள்ளிக் கிழங்கு விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 150 வருடங்களாக பூர்வீகமாக வசித்து வரும் நிலையில் இந்த இடத்தில் இதுவரை வனவிலங்குகள் அட்டகாசம் இல்லாத நிலையில் தற்போது இந்த இரண்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நான்கு நாள்களாக அப்பகுதிக்கு வரும் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.
குறிப்பாக இரண்டு யானைகளும் நெற்கதிர்களை மிதிப்பதும், அடியோடு பிடுங்கி சேதப்படுத்துவதும், மேலும் மரவள்ளி கிழங்கையும் அடியோடு பிடுங்கி சேதப்படுத்தி வருகிறது.
இந்த குறித்து விவசாயிகள் கூறுகையில், “நகைகளை அடகு வைத்து கடன் பெற்று விவசாயம் செய்துவருகிறேன். நெற்கதிர்கள், அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் யானைகள் வயலுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன. இதனால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்ட எந்த முயற்சியும் செய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.