நீலகிரி: ’புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாடு இன்று (ஏப்ரல் 25) உதகையில் தொடங்கியது. உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாட்டிலுள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிப்பது குறித்தும், ஊக்கம் அளிக்கும் விதமான கல்வி முறையை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கபட உள்ளது.
மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "கடந்த 65 ஆண்டுகளில் பின்தங்கி இருந்ததாகவும் 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் நாடு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், ஜம்மு காஷ்மீர் பிரச்னை, நக்சல் பிரச்னை, தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் கூறினார்.
மேலும் சுகாதாரம், சிறந்த கல்வி வழங்கி வருவதாகவும், உணவுப்பற்றாக்குறை நீங்கி பலருக்கும் உணவு, இருப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், சீன அத்துமீறல் மோடி ஆட்சியில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து இருப்பதாகவும் ரஷ்யா - உக்ரைன் போரில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கூறி நடுநிலை வகித்து வருவதாகவும் தெரிவித்தார், ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஒன்றிய அரசின் சாதனைகளை ஆளுநர் அதிக நேரம் பேசினார். பின்னர் பேசிய அவர், ’தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை. பல்கலைக்கழகங்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கமளித்து வேலைவாய்ப்பை பெருக்கக்கூடிய கல்வி முறையை துணைவேந்தர்கள் உருவாக்க வேண்டும்’ என்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் ஆளுநர் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில அரசே துணைவேந்தரை நியமனம் செய்யும் வகையில் சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி