நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள குடில் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரியா சாகு, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டனர். மேலும் கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரியா சாகு கூறியதாவது, "கடந்த ஒரு வாரமாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1,600 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பழங்குடியின மக்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டினர். அதனைப் போக்கும் வகையில் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று, பல்வேறு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பழங்குடியின பகுதிகளில் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஊரடங்கு காலத்தில், அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர். இதனால் அவர்கள் இருப்பிடத்திலேயே தற்காலிக குடில்கள் அமைத்து தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதிகளில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அரசு தெரிவித்துள்ள வயதிற்குட்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.