குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் சேதமான பகுதிகளைச் சீர் செய்துவருகின்றனர். தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நீலகிரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதேபோல உதகை - மஞ்சூர் சாலையில் உள்ள தேவர் சோலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலை அரிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மேலும், மண்சரிவு ஏற்பட்ட சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், அப்பகுதியைக் கடப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அகலப்படுத்த தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல 20 நாள்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: குன்னூரில் பெய்த கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு!