நீலகிரி: கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தற்போது உதகையில் கோடை விழாக்களும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 6ஆம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் மூன்று நாட்கள் நடைபெறும், இந்த 18ஆவது ரோஜா கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
மேலும் ரோஜா கண்காட்சியின் சிறப்பம்சமாக 40 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 30 அடி உயரத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா மலர்களால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஈஃபிள் டவர். 40 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், மலர்களால் வடிவமைக்கப்பட்ட மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து போன்ற வடிவமைப்புகள் மற்றும் யானைகள், மிக்கி மௌஸ், மீண்டும் மஞ்சப்பை, பல்வேறு வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
விதவிதமாக பிரமாண்டமான நுழைவுவாயில் போன்ற வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் ரோஜா கண்காட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வளர்க்கப்பட்ட கருப்பு நிற ரோஜாக்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து இழுத்தது. இந்த கருப்பு நிற ரோஜாக்களைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச்சென்றனர்.