நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்திபுரம் அருகே குன்னூரில் இருந்து கீழ்நோக்கி வந்த இருசக்கர வாகனம் சுற்றுலாத்துறை அமைச்சரின் கார் மீது மோதியதில் இரு சக்கர வாகன ஓட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் அவரது உதவியாளர், ஓட்டுநர் என அனைவரும் இன்று (டிச.07) அமைச்சரது காரில் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் குன்னூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அசாருதீன் (30) மற்றும் சுபையா பானு (22) என்ற தம்பதியினர் ஊட்டிக்குச் சென்றுவிட்டு மீண்டு திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் அசாருதீன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அமைச்சரின் காரில் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அசாருதீனுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரது மனைவி சுபையா பானுவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த தம்பதியினரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் இருந்து செல்வதற்கு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து அந்த வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தினால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த தம்பதிகள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரியலூரில் விசிக கொடிக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட விசிக தொண்டர்கள்!