வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே, இந்தியா முழுக்க 100 விழுக்காடு ஓட்டுக்களை பெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் மக்களிடையே அதிக பொருட்செலவில் விழிப்புணர்வு நடத்தி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யக்கோரி கேத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் நீலகிரியின் பூர்வீக பழங்குடி இன மக்களான குரும்பர், தோடர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பல்வேறு மக்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் பழங்குடி இன மக்களின் புகைப்படங்களை கண்டுகளித்தனர்.
மேலும், இந்த அரிய வகை புகைப்படங்களுடன், வாக்களிக்கும் முறை பற்றிய முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வு கல்லூரி மாணவ, மாணவியருக்கும் பழங்குடியின மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷனுடன் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்