உதகை தாவரவியல் பூங்காவில் பிரபலமான மலர் கண்காட்சி கடந்த 17ஆம் தேதி காலை தொடங்கியது. 123ஆவது மலர் கண்காட்சியான இதில், 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களால் ஆன பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம், 3 ஆயிரம் ஆர்க்கிட் மலர்களால் ஆன மலர் அருவி, அலங்கார மேடைகளில் வைக்கபட்டுள்ள 186 வகையான 30 ஆயிரம் மலர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.
கடந்த 5 நாட்களில், 1 லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இந்த மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ள நிலையில், இதன் நிறைவு விழா அரசு தாவரவியல் பூங்காவில் இன்று நடைபெற்றது. தமிழக தோட்டக்கலைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறந்த பூந்தோட்டங்கள், மலர் அரங்குகளை அமைத்திருந்த 699 பேருக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,
"உதகையில் நடத்தப்படும் மலர் கண்காட்சி 1896ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இது தனிதுவம் வாய்ந்த மலர் கண்காட்சி. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது. நாட்டின் வேளாண் உற்பத்தியில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருவதுடன், தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
நாடு முழுவதிலுமிருந்து தமிழகம் 19 சதவீத மலர் உற்பத்தியை செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் வேளாண்மை உற்பத்தி அதிகரித்து வருகிறது. குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி செய்ய சொட்டு நீர் பாசனம் செய்வதற்கு ஏதுவாக மானியங்கள் வழங்கி ஊக்கபடுத்தப்பட்டு வருகிறது" என்றார்.