திருச்சி : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயிலுக்கு, ஸ்விட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது, திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில், 8.50 கோடி ரூபாய் செலவில் நிலக்கரி நீராவி இன்ஜினும், 9.80 கோடி ரூபாய் செலவில் பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின் ஆகிய 2 இன்ஜின் தயாரிக்கப்பட்டது.
இன்ஜின் வழியனுப்பும் விழா
ஊட்டி மலை ரயிலுக்கான இந்த இரண்டு இன்ஜின்களையும் வழியனுப்பும் விழா இன்று (ஆக.25) நடைபெற்றது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற இந்த விழாவில் தெற்கு ரயில்வே கோட்டை மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அலுவலர்கள் மகிழ்ச்சி
இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள இந்த புதிய இரண்டு ரயில் இன்ஜின்களும், மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை ரயிலுடன் இணைத்து பயணத்தை தொடங்க உள்ளதாக, பொன்மலை ரயில்வே பணிமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி மலை ரயிலுக்கு திருச்சியிலிருந்து 2 புதிய இன்ஜின்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு? சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி