நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி மித வெப்ப மண்டலமாக உள்ளதால் அரிய வகை பழங்கள், தாவரங்கள் விளைகின்றன. குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1926ஆம் ஆண்டு நடவு செய்யப்பட்ட அன்னாசி கொய்யா பழம் மரத்தில் தற்போது மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சிம்ஸ் பார்க் பகுதிகளில் உள்ள கடைகளில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
அன்னாசி கொய்யா இனிப்பு, கசப்பு சேர்ந்த சுவையை கொண்டுள்ளது. இந்தப் பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளும் அடங்கியுள்ளன. பழத்தில் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் லைகோபீன் அதிகம் உள்ளதால் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. புண்களுக்கு தீர்வாக இந்தப் பழத்தை உட்கொள்கின்றனர்.
நரம்பு மண்டலம், மூளை பாதிப்புகளுக்கு நிவாரணியாகவும் தொற்று நோய் பரப்பும் வைரஸ்களை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இது உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை நீரழிவு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாசி கொய்யா பழ மரங்களை குன்னூர் பகுதிகளில் அதிக அளவில் நடவு செய்து வளர்க்க தோட்டக்கலைத் துறையினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.