நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுசெய்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ”நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 1ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை பெய்துள்ளது. 444 மிமீ என்ற அளவில் மழை பதிவாகியுள்து. இது சராசரியை விட 822 விழுக்காடு கூடுதாகும். 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் நீலகிரியில் கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 930க்கும் அதிகமானவர்கள் 18 தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் 22 பேரும், மாநில பேரிடர் குழுவில் 47 பேரும், தீயணைப்புத் துறையில் 269 பேரும், காவல் துறையினர் ஆயிரத்து 400 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிக காற்றின் காரணமாக 5ஆம் தேதி சாலையில் நடந்துசென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கனமழைக்கு 71 வீடுகள், சிறிய அளவில் மூன்று வீடுகள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதற்கு நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கூடலூரில் 23 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன; 274 மரங்கள் சாய்ந்துள்ளன. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 320 மின் கம்பங்கள், 7 மின் மாற்றிகள் உள்ளிட்டவை சேதடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் இவற்றைச் சரிசெய்ய கொடைக்கானலிலிருந்து 40 பேர் கொண்ட குழு வரவுள்ளது.
இரண்டு நாள்களுக்குள் பணி நிறைவடைந்து மின் விநியோகம் சீர் செய்யப்படும், குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்கிவிட்டு விரைவில் சீர் செய்யப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர்களின் காரை யானை வழிமறித்ததால் பரபரப்பு!