நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணை நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், 21ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு கோவை சிறையிலிருந்த சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.
இதனையடுத்து விசாரணைக்கு வராத எட்டு பேருக்கு பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கபட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஆக.27) விசாரணைக்கு வந்தபோது சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி ஆகியோர் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டனர்.
மற்ற 6 பேர் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதனையடுத்து திபு, ஜித்தின் ஜாய், உதயகுமார், பிஜின்குட்டி உள்ளிட்ட ஆறு பேரை பிடிக்க எட்டு தனிப்படை காவலர்கள் கேரளாவில் முகாமிட்டு தேடி வருகின்றனர். இதனிடையே வழக்கு விசாரணையை நீதிபதி வடமலை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 21ஆம் கட்ட விசாரணை நிறைவு