குன்னூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உதகையில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அங்கு இதமான வெப்பநிலை நிலவுவதால், தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் செல்கின்றனர். வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று மக்கள் உற்சாகமாக பொழுதைக் கழிக்கின்றனர்.
ஆண்டுதோறும் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக்கண்காட்சி மிகவும் பிரசித்தம். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில மக்களும், இக்கண்காட்சியைக் காண வருவார்கள். இதை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவை மலர தொடங்கியுள்ளன. வண்ண வண்ண மலர்கள் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பூத்துக்குலுங்குகின்றன.
மேலும் பூங்காவில் உள்ள பண்ணையில் 4,500 தொட்டிகளில் சால்வியா, ஃப்ளக்ஸ், மேரி கோல்டு, பிரிக்கோனியா, பேன்சி உள்ளிட்ட வெளிநாட்டு ரக மலர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மலர்களை, சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு பூங்காவில் அடுக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களைக் கவரும் வகையில், விதவிதமான பூச்செடிகளை வைக்க முடிவு செய்துள்ளதாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.