நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை வனப்பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் யானை உள்பட வன விலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. பசுமையான இயற்கைக் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும். குறிப்பாக மலைப் பாதை ஓரங்களில் உள்ள நீர் வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இந்நிலையில் மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் நீர் பெருக்கெடுத்துள்ளது. நீர்வீழ்ச்சி சாரலில் நனையவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வறட்சி நீங்கி மலைப்பகுதி முழுவதும் பசுமை படர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பழங்குடியின விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.