மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று சற்று குறைந்து காணப்படுவதால் உதகை தாவரவியல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவு கவரக்கூடிய மலை ரயில் சேவையும் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பு ரயிலாக கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சிறப்பு மலை ரயில் இன்று (டிசம்பர் 12) மேட்டுப்பாளையத்தில் இருந்து 141 பயணிகள், 20 ரயில்வே பாதுகாப்பு படையினருடன் பிற்பகல் உதகமண்டலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பு ரயிலாக இயக்கப்படும் மலை ரயிலுக்கு கண்டனம் தெரிவித்து, ரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 17 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, மீண்டும் மலை ரயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.