நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 30 கி.மீ., தொலைவில் யானை பள்ளம், சின்னாலக்கம்பை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் அமைந்துள்ளன. அடர்ந்த வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், பில்லுார்மட்டத்தில் இருந்து 11 கி.மீ., தூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
சமீப காலமாக இந்த பகுதிகளில் வன விலங்குகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இக்கிராமங்களில், வசிக்கும் இருளர் இன பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை, குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.
தற்போது, அனைத்து இடங்களிலும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பழங்குடியினருக்கு மொபைல் நெட்வொர்க் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதில், கல்லூரியில் பயிலும் மாணவியரும் அவ்வப்போது சிறுவர், சிறுமியருக்கு பாடங்களையும் கற்பிக்கின்றனர்.
மொபைல் நெட்வொர்க் முழுமையாக கிடைக்காததால் உயரமான இடத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று அமர்ந்து கல்வி பயில்கின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பாடங்களை எழுதி மொபைலில் போட்டோ எடுத்து அனுப்ப மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு தீர்வுக் காண அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து பழங்குடியினரின் கல்விக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சபர்மதி ஆற்றில் கோவிட் வைரஸ் மாதிரிகள்!