நீலகிரி மாவட்டம் குன்னூர் அரவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வெடிமருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது, இந்துஸ்தான் லேடெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தேவை காரணமாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழிற்சாலைகளில் சானிடைசரைத் தயாரித்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கொல்கத்தாவிலுள்ள மத்திய பாதுகாப்பு படைக்கள தொழிலக பொதுமேலாளர் ஹரிமோகன் உத்தரவின்பேரில், அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், 13 ஆயிரம் லிட்டர் சானிடைசர் திரவம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான மூலப்பொருள்கள் வரவழைக்கப்பட்டன.
முதற்கட்டமாக, அதிக பாதிப்படைந்திருக்கும் கேரளாவின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆயிரத்து 500 லிட்டர் சானிடைசர், இந்துஸ்தான் லேடெக்ஸ் லிமிடெட் கம்பெனியின் மூலமாக, வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் சஞ்சய் தலைமையில் அம்மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள் முகக்கவசங்கள் அணிந்தும், பல்வேறு குழுக்களாகப் பிரிந்தும் பாதுகாப்புடன் பணியாற்றிவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல்!