நீலகிரி: கூடலூரை அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் நாதன்(53). இவர் ஓவேலி அருகே பாலவாடி தர்மகிரி பகுதியில் தேயிலைத் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், பசுந்தேயிலை பறித்தல் மற்றும் தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக, செல்வபுரம் பகுதியில் இருந்து நேற்று (ஜூலை 8) வழக்கம் போல, பேருந்தில் பாலவாடி வரை சென்று அங்கிருந்து காப்பி தோட்டம் வழியாக தேயிலை தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது காட்டு யானை ஒன்று திடீரென எதிர்பாரதவிதமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஏற்கனவே இதேப் பகுதியில், கடந்த மே 26 மற்றும் 27 தேதிகளில் அடுத்தடுத்து 2 பேரை காட்டு யானைகள் தாக்கி இறந்த சோகம் மறைவதற்குள் தற்போது 3 ஆவதாக ஒருவரை, காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக கடந்த மே மாதம் 26ஆம் தேதி ஆனந்த் என்பவரை தாக்கிய போதே, அப்பகுதி மக்கள் காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 கும்கி யானைகளைக் கொண்டு கண்காணித்து வந்துள்ளனர்.
கும்கி யானைகளைக் கொண்டும் காட்டு யானையை விரட்டாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் நேற்று இறந்தவரின் உடலை ஒவேலிக்கு எடுத்து வந்து வனத்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு சென்ற கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் உடலை கூடலூர் நகரின் கூடலூர்-உதகை மற்றும் கூடலூர்-கள்ளிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கபட்டது.
இதையும் படிங்க: மிரட்டும் ஒற்றை யானை... முகாமிட்ட சின்ன தம்பி.. தாளவாடியில் அடுத்து என்ன?