நீலகிரி: உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது.
தும்பிக்கையில் காயம், வலது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியிலேயே இந்த யானை சுற்றிவரும் சூழல் உள்ளது. இதனால் அக்கிராம மக்கள் யானையைப் பிடித்து முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டுசெல்லுமாறு கோரிக்கைவிடுத்து-வந்தனர்.
இதனையடுத்து, அந்த யானை கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே அமைக்கபட்ட கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் வனப் பகுதியில் விடவும் கோரிக்கைவைத்தனர்.
பின்னர், யானையை விடுவிப்பது குறித்து முடிவுசெய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு ரிவால்டோ யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவுசெய்தது. மேலும் அதனைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ரிவால்டோ யானை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா வனப் பகுதியில் விடப்பட்டது.
மூன்று மாத காலம் கிரால் கூண்டில் வைக்கப்பட்ட யானை மீண்டும் வனப் பகுதியில் விடப்பட்டது இதுவே தமிழ்நாட்டில் முதல்முறை என வனத் துறைச் செயலர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.
இதையும் படிங்க: டுமீல் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் வெட்டிக்கொலை