நீலகிரி மாவட்டம் மழவன் சேரம்பாடி பகுதியில் தந்தை மகன் உள்ளிட்ட மூன்று பேரை கொன்ற ஆட்கொல்லி யானை சங்கர் கேரளாவுக்குத் தப்பி ஓடியது. கடந்த 4ஆம் தேதி மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள சேரம்பாடி தேயிலை தோட்டப் பகுதிக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து ஐந்து கும்கி யானைகள், 50-க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உதவியுடன் நான்கு கால்நடை மருத்துவர் குழு ஆட்கொல்லி யானை சங்கரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று (பிப். 11) மாலை சுல்லிக்கொடு தேயிலைத் தோட்டப் பகுதியில் ஆட்கொல்லி யானை சங்கர், இரு பெண் யானைகள் ஒரு குட்டியுடன் வந்து மகிழ்ச்சியாக விளையாடியது.
யானைகள் இருப்பிடம் குறித்து வனத் துறையினரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து ஆட்கொல்லி யானை சங்கர் இரு பெண் யானைகள், ஒரு குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.
ஆட்கொல்லி யானை சங்கரைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினர் இன்று (பிப். 12) எட்டாவது நாளாகத் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: யானை வழித்தடத்தில் செங்கல் சூளை! - உடனே அகற்ற உத்தரவு!