நீலகிரி: கோத்தகிரி உயிலட்டி கிராமத்தில் கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். இவற்றைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் கடந்த 29 ஆம் தேதி இரண்டு குட்டி கரடிகள் அகப்பட்டன.
இந்த இரண்டு குட்டிகளும் முதுமலை வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. பின்னர், தாய்கரடியைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் அதே பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. வனத்துறையினர் வைத்த கூண்டிற்கு அருகில் தனது குட்டிகளை நேற்று (ஆக.12) தேடி வந்த தாய்க் கரடி கூண்டின் மீது ஏறியும், கூண்டை சுற்றிச் சுற்றி வருவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்டிகளை பிரிந்த இந்த தாய்கரடியை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தாவது விரைவில் முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இறுதிச் சடங்குக்காக ஆற்றில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி