நீலகிரி: சென்னையில் நடந்த சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று (ஆக. 3) உதகை வந்தார்.
கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்ற அவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தற்போது அவர் ராஜ்பவனில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ராஜ் பவன்
உதகையில் உள்ள ராஜ் பவன், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போது ஆங்கிலேய அலுவலர்கள் சென்னையின் வெப்பம் தாங்காமல் நீலகிரியின் குளிரில் இளைப்பாற வருவார்களாம். பின்னாளில் தமிழ்நாட்டின் ஆளுநர்களுக்கு கோடைகால இல்லமாக இது மாற்றப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி வந்த குடியரசு தலைவரும் ராஜ் பவனில்தான் தங்குகிறார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை காலை பங்கேற்கிறார்.
பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உள்நாட்டு பாதுகாப்பு துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோயம்புத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 1,200 மேற்ப்பட்ட காவல்துறையினர் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமரைச் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு: தீவிரப் பரப்புரையில் டெல்லி பாஜக