நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான நீலகிரியிலுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை தொடங்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த வாரம் சசிகலாவிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சஜீவனிடம் கடந்த இரண்டு நாள்களாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மர வியாபாரியான சஜீவன் மாநில வர்த்தக அணி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்தவர். கோடநாடு பங்களாவில் உட்புற அலங்கார வடிவமைப்பு பணிகளை மேற்கொண்ட சஜீவன், அப்பங்களாவை நன்கு அறிந்தவர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சஜீவனுக்கு தொடர்பு இருப்பதாக தொடக்கத்தில் இருந்தே, குற்றம்சாட்டியிருந்து வந்த நிலையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை காவல் துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலா பினாமிகளின் சொத்து குறித்த வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு