நீலகிரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக 70 குடிநீர் ஏடிஎம்களும் திறக்கப்பட்டுள்ளன. அந்த ஏடிஎம்களிலிருந்து சுற்றுலா பயணிகள் தண்ணீரை பிடித்து குடித்துவருகின்றனர்.
இந்நிலையில் தடை குறித்து அறியாமல் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பாட்டில்களை வாங்கி உடனடியாக மறுசுழற்சி செய்யும் விதமாக நவீன இயந்திரங்களை பொருத்தும் பணி தொடங்கபட்டுள்ளது.
இந்த இயந்திரத்தினுள் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டவுடன் பாட்டில்கள் சிறு சிறு துகள்களாக மாற்றப்படும். இந்த இயந்திரங்களானது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்கப்பட இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.