டிசம்பர் மாதத்தை நெகிழி ஒழிப்பு மாதமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலுள்ள மொத்த நெகிழியையும் அகற்றும் விழிப்புணர்வு பரப்புரையை நாடு முழுவதும் அனைவரும் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து குன்னூர் பிராவிடெண்ட் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் ஊர்வலமாகச் சென்று கடைகள், வீடுகளில் உபயோகப்படுத்தும் பால் பாக்கேட் போன்றவற்றை சேகரித்து அதனை நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் பச்சை, சிவப்பு தொட்டிகளுடன் கூடுதலாக நெகிழியை போடுவதற்காக தனியாக ஒரு பை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுக்கப்போவதாக தெரிவித்தார்.
மாணவி ஒருவர் கூறுகையில், மாணவிகள் அனைவரும் காலையில் நடைபயணம் செல்லும்போது, கையில் பை கொண்டு செல்வதாகவும், அப்போது வழியில் கிடக்கும் நெகிழியைச் சேமித்து அகற்றுவதாகவும், இது போல் இந்தியாவில் எல்லோரும் செய்தால் நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.