நீலகிரி: குன்னுார் நகரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை இருந்து வருகிறது. இந்த அணை 43.6அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து தண்ணீர் குன்னூர் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வறட்சி காலங்களில் நீரின் அளவு 10 அடிக்கும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் தண்ணீரைத் தேடி பல கி.மீ., தொலைவிலுள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர். நகராட்சி சார்பில் 10 நாள்கள் முதல் 15 நாள்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால், மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். தற்போது பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்ததால் ரேலியா அணை 43.6 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரி நீர் வெளியேறி வருகிறது.
அவ்வாறு வெளியேறும் உபரி நீரை வீணடிக்காமல், அங்கு சிறிய தடுப்பணைகள் அமைத்தால் குடிநீரை சேமிக்க முடியும். இதனால் கோடைகாலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு