நீலகிரி மாவட்டத்தை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல், மண்வயல் கம்மாத்தி, கிளிச்செல்லூர் போன்ற பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக புலி நடமாட்டம் இருந்துவருகிறது.
கடந்த மூன்று மாதங்களில் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடமாடும் புலி, இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மாடுகளையும், பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளையும் கொன்றுள்ளது. புலி நடமாட்டம் காரணமாக அதிர்ச்சி அடைந்த கிளிச்செல்லூர் பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியும் வந்துள்ளனர்.
இந்நிலையில் கிளிச்செல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது வீட்டின் அருகே வளர்த்து வருகிற மாட்டு கொட்டகைக்குள் இன்று அதிகாலை வந்த புலி கொட்டகையை உடைத்துக்கொண்டு உள்ளே இருந்த கறவை மாட்டை கடித்துக்கொன்றுள்ளது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே கூட்டமாக பகுதி மக்கள் வந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதி முழுவதும் நாங்கள் மாடு வளர்ப்பது எங்களது வாழ்வாதாரத்திற்காக. இப்போது, எங்களின் வாழ்வாதாரமே பறிபோகும் நிலையில் இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இப்பகுதியில் சுற்றிவரும் அந்த புலியானது மூன்றுக்கும் மேற்பட்ட கறவை மாடுகளையும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளையும் கொன்றுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகாவது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உடனடியாக கூண்டு வைத்து அந்த புலியை பிடித்து முதுமலைப் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விட வேண்டும்.” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : காஷ்மீர் எல்லை பாதுகாப்பு முகாமில் வெடிகுண்டு பார்சல்: படைவீரர் கைது