நீலகிரி: கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதிகளில் நான்கு பேரை வேட்டையாடிக் கொன்ற டி23 என்ற புலியைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் புலியை உடனடியாக சுட்டுக்கொல்ல வேண்டும் அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வேண்டும் என மசினகுடி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டி23 புலியைப் பிடிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 150 வனப்பணியாளர்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்காரா வனப்பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
புலிகள் மனிதர்களைக் கண்டால் ஓடும்
இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில், “ஒரு காட்டில் புலி வசிப்பதன் மூலம் வளமான காட்டின் அறிகுறியைக் கண்டறிய முடியும். அப்படிப்பட்ட இந்தப் பகுதியில் துரதிருஷ்டவசமாக இந்தப் புலி மனிதர்களை தாக்க தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் மிகுந்த பயத்துடனும், கோபத்துடனும் உள்ளனர்.
அதனால் இந்த புலியைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக புலிகள், மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடும் சுபாவம் கொண்டது. அதன் காலச் சூழல், வயது முதிர்வின் காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளைத் தாக்கத் தொடங்கும். சில சமயம் எதேச்சையாக மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
புலியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை
அப்படி தான் இந்தச் சம்பவமும் நடைபெற்றுள்ளன. வயதான புலி என்றால் அவை வேட்டையாட முடியாத சூழலில் எளிதாக கிடைக்கும் இறைகளை சாப்பிட தொடங்கும். அதுபோன்றுதான் டி23 புலிக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது மனித மாமிசத்தைச் சாப்பிடத் தொடங்கியதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதன் காரணமாகவே புலியை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் மனிதர்களால் அந்தப் புலிக்கும், புலியால் மனிதர்களுக்கும் நிறைய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அதனைத் தவிர்க்கும் வகையில் டி23 புலியை இடமாற்றம் செய்வதே சிறந்த வழி, வேறு வழி இல்லாததால் சுட்டுக்கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Operation Tiger T23 - 10ஆவது நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகள் தீவிரம்