நீலகிரி மாவட்டம் கூடலூர் - பந்தலூரில் வனத்தை ஒட்டியும், வனத்திற்குள்ளும் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வனஉரிமைச் சட்டம் 2006இன் படி தாங்கள் கைவசம் உள்ள நிலம், சுடுகாடு உள்ளிட்டவைகளுக்கு பட்டா கோர முடியும். மேலும் இந்தச் சட்டத்தின் படி வனப்பகுதிக்குள் சென்று விறகு சேகரிக்க, தேன் எடுக்க உள்ளிட்ட 21 வகை உரிமைகளைப் பெற முடியும்.
கூடலூர் அருகேயுள்ள காஞ்சிகொல்லி கிராமத்தைச் சேர்ந்த 67 பழங்குடியின மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உரிமை கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அதில் தங்கள் கைவசம் உள்ள நிலம், பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் சுடுகாடு, பள்ளி உள்ளிட்டவைகளுக்கு உரிமை கோரப்பட்டு இருந்தது.
உரிமை கோரி இரண்டு ஆண்டுகள் ஆகியும், தங்களுக்கான உரிமைகளை வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உரிமைகள் வழங்கப்படாத காரணத்தால், தங்களால் வனப்பகுதிக்குள் சென்று தேன் எடுக்க, விறகு சேகரிக்க, வீடுகளைச் சீரமைக்க, மூங்கில் வெட்ட அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்.
மேலும் வனப்பகுதிக்குள் உள்ள சுடுகாட்டில் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்யவும், வனப்பகுதிக்குள் உள்ள பூர்வீகமான கோயில்களில் வழிபடவும் முடியாத நிலை இருப்பதாக வேதனையோடு கூறுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் வன உரிமைச் சட்டத்தின் படி, தங்களுக்கான உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: