கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நீலகிரி வனத்துறையில் பணி புரிந்து வந்தார். அவர் 2007 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சுதன்ராஜ் என்பவர் திருநங்கையாக மாறிய பின்னர் "தீப்தி" என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.
பி.காம் பட்டதாரியான தீப்தி, தனது தந்தையின் வேலையை வாரிசு அடிப்படையில் கேட்டு, தமிழக வனத்துறைக்கு விண்ணப்பிருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து முயற்சித்து வந்தநிலையில், தமிழக வனத்துறை சார்பில் பணியில் சேர உத்தரவு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது தந்தை சுப்பிரமணி பணி புரிந்த நீலகிரி வனக்கோட்டத்திலேயே தீப்திக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவை சந்தித்து தனது பணி ஆணையை வழங்கி பணியில் சேர்ந்தார்.
அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை, என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட சில துறைகளில் பணியில் சேர்ந்து வரும் நிலையில், வனத்துறையிலும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக பணியில் சேர்ந்திருப்பது திருநங்கை சமுதாயத்தினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட ’திருநங்கை’ என்ற சொல்லை மாற்றப் போகிறதா அரசு?