கரோனா வைரஸ் (தீநுண்மி) ஊரடங்கால் கடந்த 172 நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கால் மே மாதத்தில் நடைபெற இருந்த மலர் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. சுற்றுலாவை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் தோட்டகலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காக்கள் இன்று திறக்கபட்டன.
இன்று முதல் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு அனுமதிக்கபடவுள்ளனர். இதற்காக இ-பாஸ் விண்ணபிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. இ-பாஸ் விண்ணப்பிக்கும் போது சுற்றுலா என தனியாக விண்ணபித்து நீலகிரி வரலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவிற்கு வரும் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறியவர்களுக்கு 20 ரூபாய் என நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்க்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதல் நாளான இன்று குறைந்த அளவான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். தொட்டபெட்ட மலை சிகரம், படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கன்றுக்குட்டியை மீட்க முயன்று ஐந்து பேர் உயிரிழந்த பரிதாபம்; கன்று உயிர் பிழைத்த அதிசயம்