மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதிவரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்தச் சீசனில் உதகையை காண சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பூங்காவில் உள்ள 15 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பிக்கொனியா, மேரிகோல்டு, டேலியா, டெய்சி, காலண்டுள்ளா, ஆஸ்டர், ஆர்கிட், டையானதஸ், பால்சம், ஜெரேனியம் உள்ளிட்ட 85 வகையான மலர்ச்செடிகள் அடுக்கும் பணி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர வேண்டும் எனவும் நெகிழிப் பொருட்களை எடுத்துவரக் கூடாது என்றும் வேண்டுகோள்விடுத்தார்.