நீலகிரி: உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதிக்கு உள்பட்ட மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய கிராமப் பகுதிகளில் ரிவால்டோ என்ற ஆண் காட்டு யானை கடந்த எட்டு ஆண்டுகளாக சுற்றித்திரிந்து வந்தது.
45 வயது மதிக்கதக்க அந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுவாசப் பிரச்னை, வலது கண் பார்வை குறைவு உள்ளிட்ட காரணங்கள் ஏற்பட்டு, பெரும்பாலான நேரம் குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி திரிந்து வந்தது.
சிலர் அந்த யானையின் முன் நின்று செல்ஃபி எடுப்பது, தொட முயற்சி செய்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ரிவால்டோ யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்குமாறு கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
தொடர்ந்து, கடந்த மே மாதம் அந்த யானை வாழைத்தோட்டம் சோதனை சாவடி அருகே அமைக்கபட்ட கிரால் எனப்படும் மரக்கூண்டிற்குள் உணவு சாப்பிட சென்றபோது அடைக்கப்பட்டது.
மயக்க ஊசியின்றி கும்கி யானைகளை பயன்படுத்தாமல் முதன்முறையாக புதிய முயற்சியாக ரிவால்டோ யானை மரக்கூண்டில் அடைக்கபட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து ரிவால்டோ யானையை மீண்டும் வனப்பகுதியில் விடுவதா அல்லது முதுமலைக்கு கொண்டு செல்வதா என்பதை முடிவு செய்ய கால்நடை மருத்துவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட எட்டு பேர் கொண்ட குழு புலிகள் காப்பக நிர்வாகம் சார்பாக அமைக்கபட்டது.
அந்தக் குழு கடந்த சில நாள்களுக்கு முன்பு ரிவால்டோ யானையை ஆய்வு செய்த நிலையில், நேற்று (ஜூலை.16) மாலை அறிக்கையை வழங்கியது.
அதன்படி, கிராலில் அடைத்து வைக்கபட்டுள்ள ரிவால்டோவை உடனடியாக கூண்டிலிருந்து வெளியில் அழைத்து வந்து முதுமலை அபயாரண்யம் பகுதிக்கு கொண்டு சென்று 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் வைத்து கண்காணிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சில மாதங்கள் கண்காணிப்பிற்குப் பிறகு வனப் பகுதியில் மீண்டும் விடுவது குறித்து முடிவு செய்யபடும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிவால்டோ யானையை சிங்காரா வனப்பகுதியில் மீண்டும் விட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் துவண்ட வண்டலூர் பூங்கா: இணையம் மூலம் பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள்